Sunday, July 7, 2013

ஒரு பொய்


ஒரு பொய் 

ஒரு பொய் 
என் நெஞ்சைப் பிளந்தது 
அதைப் புன்முறுவலுடன் 
ஏற்றுக்கொண்டேன் 

என் கண்களை 
அழக்கூடாது என்று 
கேட்டுக்கொண்டேன்
ஆனால் 
விழித்திரையின் 
வேறொரு பக்கமிருந்து 
கண்ணீர் பொத்துக்கொண்டது 

ஒரு குற்றச்சாட்டு 
வேரறுந்த கொடியின் 
நுனிக் கொழுந்து போல் 
என்னை ஆக்கிவிட்டது 

ஒரு மின்னல் ரம்பம் 
என்னை இரண்டாக 
வகிடு எடுத்தது  
நான் 
மன்புழுவாய்த் துடித்தேன் 

நான்கைந்து கத்திகள் 
அடிவயிற்றில் இறங்கியது
நானோ 
இன்னும் ஆழமாக 
குத்தச் சொல்லி மன்றாடினேன் 

ஒரு துரோகத்தைக் கொண்டாடி 
அதை வென்று எடுத்தேன் 

ஆனால் 
இந்தக் கண்ணீர் மட்டும் 
எங்கிருந்து வருகிறது 
என்று தெரியவில்லை 

கண்களில் இருந்து 
வருவது மட்டுமே 
கண்ணீர் அல்ல  

இறந்து போவது மட்டுமே 
இறப்பும் அல்ல 

#
வே.ராமசாமி 

contact


Sunday, June 2, 2013

மோகினி


மோகினி
கண்ணீரில் தீப்பொறி தெறிக்க வைக்கிறாள் 

மோகினி 
வேப்பம்பழச் சேலைகட்டி ஆடுகிறாள் 

மோகினி 
புன்னகையில் படுகொலை செய்கிறாள் 

மோகினி 
நெஞ்சைப் பிளந்து சுகமாக வசிக்கிறாள் 

மோகினி 
இதயத்தைப் பழுக்க வைத்துச் சம்மட்டி அடிக்கிறாள் 

மோகினி 
வெப்பாலையில் பெருமழை பொழிகிறாள் 

மோகினி 
என் மூச்சைக் குடிக்கிறாள் 

மோகினி 
என் உள்ளங்கையில் நடனமாடுகிறாள் 

மோகினி 
நெஞ்சில் குதியாளம் போடுகிறாள் 

மோகினி 
மண் வீட்டில் வாசஸ்தலம் கொள்கிறாள் 

மோகினி 
மாடுகளுக்குத் தீவனமிடுகிறாள் 

மோகினி 
எதிர்பாராதவிதமாக வீட்டு வாசப்படி வருகிறாள் 

மோகினி 
சொற்களின் பல்லை உடைக்கிறாள் 

மோகினி 
சூறைக்காற்றில் தேடி வர வைக்கிறாள் 

மோகினி 
மானத்தை ஒரு பொருளாகக் கொள்ளச் செய்தாள் இல்லை 

மோகினி 
உறவினர்கள்போல் உற்றார் (கொடியவர்) எவருள்ளார் ?

மோகினி 
அலைமோத வைக்கிறாள் 

மோகினி 
ஒரு கானல் வழியில் கண்ணீரைக் கொண்டு வந்தாள் (வாராள் )

மோகினி 
உன்மத்தம் கொள்ள வைக்கிறாள் 

மோகினி 
சிறிய நாட்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறாள் 

மோகினி 
சிறிய உயிரை பல்லாங்குழி ஆடுகிறாள் 

மோகினி 
சிதிலமடையச் செய்கிறாள் 

மோகினி 
செழிக்கச் செழிக்கச் செய்கிறாள் 

மோகினி 
அற்பர்களை பெரும் பொருளாக்குகிறாள் 

மோகினி 
நல்லவனை மன்றாட வைக்கிறாள்

மோகினி 
உறுதி கொள்ள வைக்கிறாள் 

மோகினி 
வெல்லத் தூண்டுகிறாள் (வெல்ல வைத்து விடுவாள் )

மோகினி 
எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் எரிகிறாள் 

மோகினி 
என்ன செய்தும் தணிந்தாள் இல்லை (நினைவுகள் ) 

மோகினி 
(இப்படி)ஒரு கவிதைக்குப் பின் கொஞ்சம் தணிகிறாள் 

மோகினி 
பிற்பாடு விரி காற்றாவாள் 

வே.ராமசாமி  

Saturday, April 6, 2013

கடலுக்கு மேலே இருக்கும் நிலா

கடலுக்கு மேலே இருக்கும் நிலா 
####

கடலுக்கு மேலே இருக்கும் நிலா 
தரைக்கு மேலே உள்ள நிலா அல்ல 

நான் நடந்தால் 
அது என்னோடு வரவில்லை 
நான் அதோடு போய்விட்டேன் 

#####

அலைகளின் முதுகில்
அது ஒரு ஆரஞ்சுப் பழம்

துறைமுகக் கப்பலில்
அது ஒரு விளக்கு

மேகத்தின் புதைகுழியில்
அமிழ்ந்திய மஞ்சள் கண்

ஏழு நிறங்களில்
எரியும் வானவில்லருகே
அது ஒரு தீக் கங்கு

வானத்திற்கு
அது ஒரு வட்டச் சன்னல்


####

கடலுக்கு மேலே இருக்கும் பிறை நிலா
தரைக்கு மேலே இருக்கும் பிறை நிலா அல்ல

சொல்லப் போனால்
அது அவரைப்பூ நிலா

இன்னும்
சொல்லப் போனால்
அது ஒரு பொன்சிட்டு

#######